மனைவி அரிவாள் வாங்கி தர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை..

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). விவசாயி.
இவர் கடந்த சில வருடங்களாக வயது முதிர்வு காரணமாக ஞாபக மறதியால் அவதி அடைந்து வந்தார். இதனால் இவரது குடும்பத்தினர் அவரை எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்து கொண்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் தான் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்த அரிவாளை எங்கோ துளைத்து விட்டார். இதனால் அவர் தனது மனைவியிடம் புதிய அரிவாளை வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவர் அரிவாளை வாங்கி தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் தங்கவேல் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தங்கவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி அரிவாள் வாங்கி தராததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.