ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருந்து கொடுக்கும் விருந்தில் பங்கேற்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களில் ஒருவர் பலியான நிலையில், கர்ப்பிணி உள்பட 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருவாசல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக அடியமக்கமங்கலத்தில் உள்ள மாரியம்மாளின் தாய் வீட்டில் இருந்து சீர் கொண்டுவரப்பட்டது.
இதில் தயிர்சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இதனிடையே விழாவுக்கு வருவோருக்கு பரிமாறுவதற்காக புலிவலம், வாழ வாய்க்காலில் உள்ள உணவகங்களில் இருந்து கோழி பிரியாணி வாங்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்றவர்கள் இந்த உணவு வகைகளை சாப்பிட்ட நிலையில் 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணி மாரியம்மாள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், வேளுக்குடியை சேர்ந்த செல்வ முருகன் என்பவர் உயிரிழந்தார்.
கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதே விருந்தில் பங்கேற்ற அடியேக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது