இந்தியாவை குறி வைக்கும் பயங்கரவாதிகள்- எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..!

வாஷிங்டன்: இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது

இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர்.

அதேபோல அமெரிக்காவில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்கா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.

அதிகரிக்கும் குற்றச் சம்பங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இப்போது இந்தியாவை அமெரிக்கா லெவல் 2இல் வைத்து உள்ளது. அமெரிக்கா வெளியிடும் எச்சரிக்கையில் 4 லெவல் உள்ளன. அதில் லெவல் நாட்டில் உள்ளது மோசமான நாடாகும்.

பாகிஸ்தான் இதில் லெவல் 3இல் இருக்கிறது. பயங்கரவாதம் மற்றும் மதவெறி வன்முறை காரணமாகப் பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கக் குடிமக்கள் தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் தான், இந்தியா பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. குற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இந்தியா வரும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் (கிழக்கு லடாக் மற்றும் லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களிலும் பிற இடங்களிலும் அதிகமாக நடக்கிறது.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலர்களைக் குறிவைத்து எவ்வித எச்சரிக்கையுடன் இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானாவில் இருந்து மேற்கு வங்கம் வரை இருக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசரக்கால உதவிகளை அதிகம் வழங்க முடியாது. ஏனென்றால் இந்த பகுதிகளுக்குச் செல்ல அமெரிக்க அதிகாரிகள் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்கா ஒரு நாட்டில் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். இருப்பினும், இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரிக்கும் கிரைம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.