திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரை சேர்ந்த ஓய்வுப் பெற்ற தனியார் நிறுவன ஊழியர் முத்து இருளப்பன் (61). வருமான வரி கட்டும் இவருக்கு, கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், கடந்தாண்டு கட்டிய வருமான வரியில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முத்து இருளப்பன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அனுப்புவதற்கான அனுமதியை செயலி வசம் கொடுத்துள்ளார். அதன்பின், வெளியூர் செல்வதற்காக பேருந்துக் கட்டணம் செலுத்த அவருடைய ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தி உள்ளார்.
அப்போது, அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று மெசேஜ் வந்துள்ளது. உடனடியாக அவர் திருவெறும்பூர் ஐசிஐசிஐ வங்கியை தொடர்புக் கொண்டு உள்ளார். அவர்கள், அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த, 14,50,654 ரூபாய் எடுக்கப்பட்டதை உறுதிச் செய்தனர்.இதனால், அதிர்ச்சியடைந்த முத்து இருளப்பன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவுச் செய்த இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.