40 சதவீதம் கமிஷன் கறாராக கேட்ட திமுக எம்எல்ஏ – ஊராட்சித் தலைவர்கள் ஆதங்கம்..!

ண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 40 சதவீதம் கமிஷன் வேண்டும் என ஊராட்சித் தலைவர்களிடம் ஆம்பூர் திமுக எம்எல்ஏ பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் மிட்டாளம், தேவலாபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்களிடம் பேசிய ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தமக்கு 40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என கறாராக பேசி வாக்குவாதம் செய்ததுள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்தில் இந்த அளவுக்கு கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுக்கப்படுவதில்லை என்று அவரிடம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அதற்கு பதிலளித்த வில்வநாதன், திருப்பத்தூர் எம்எல்ஏ கமிஷன் வாங்குவது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டு கமிஷன் தொகைக்கு பிடிவாதம் காட்டியது ஊராட்சி மன்றத் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொகுதியில் திட்டப் பணிகளில் கமிஷன் கேட்கும் அவர், மக்களுக்கான பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.