ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக 1990 முதல் அனுசரித்து வருகிறது. இந்த நாளில் சமுதாய முன்னேற்றத்திற்கு முதியோர்கள் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூருவதற்கும் மற்றும் அவர்களை பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.
இதனை முன்னிட்டு செப்டம்பர் 30, 2022 அன்று ஹெல்ப்ஏஜ் இந்தியா, முதியோர் உதவி எண் – 14567 மற்றும் ஈட்டன் நிறுவனம் இணைந்து புதுவையில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் உள்ள 150 முதியவர்களை படகு சவாரிக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். இந்நிகழ்ச்சியின்போது முதியவர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியை தலைமை விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் பிரதிநிதிகள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து டாக்டர் சத்தியபாபு (துணை திட்ட இயக்குனர் – தாமரைக்குளம், முதியோர் கிராமம்) வரவேற்புரை வழங்கினார், வேணுகோபால் ராமலிங்கம் (தலைவர் – திட்ட மேலாண்மை ஹெல்ப்பேஜ் இந்தியா) உலக முதியோர் தினம் 2022 பற்றி விரிவான கருத்துகளை பகிர்ந்தார். இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர் உதயகுமார் I.A.S (அரசு செயலாளர் – சமூக நலத்துறை, புதுச்சேரி), சிறப்பு விருந்தினர்கள் பத்மாவதி (இயக்குனர் மற்றும் துணை செயலாளர், சமூக நலத்துறை – புதுச்சேரி), சையது சஜ்ஜத் அலி (நிர்வாக இயக்குனர் – ஈட்டன் நிறுவனம், புதுச்சேரி), ஸ்ரீதரன் (மூத்த நகர அமைப்பாளர் – புதுச்சேரி நகர அமைப்பு குழுமம்) ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்விற்கு நன்றியுரையை கெளதம் யஷ்பால் (திட்ட மேலாளர் – முதியோர் உதவி எண்- 14567) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈட்டன் நிறுவன பணியாளர்கள், முதியோர் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் உதவி எண் பணியாளர்கள், புதுவை பல்கலைக்கழக சமூக பணித்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.