இன்று மீண்டும் கேரளா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்… மாநாட்டில் பேச்சு.. பினராயி விஜயனுடன் சந்திப்பு..!

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள தாகூர் தியேட்டரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இன்று நடைபெறும் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

ஏற்கனவே கேரளாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்றுப் பேசியிருந்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

கடந்த மாதம், திருவனந்தபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்காக கேரளா சென்றிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் நிலவரங்கள் குறித்தும், இரு மாநிலங்களுக்கும் இடையான நதிநீர் பங்கீட்டு விஷயங்கள் குறித்தும் விவாதித்தார்.

முன்னதாக, கேரளாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது மலையாளத்திலும் பேசி அசத்தினார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, கேரள முதல்வருடனும், இடதுசாரி கட்சிகளுடனும் இணக்கமான உறவைப் பேணி வரும் ஸ்டாலின், அடிக்கடி கேரளா சென்று வருகிறார்.

இந்நிலையில், இன்று மீண்டும் கேரளா செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடக்கிறது. நேற்று திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள தாகூர் தியேட்டரில் தொடங்கிய இந்த மாநாடு அக்டோபர் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார்.

சிபிஐ கட்சியின் இந்த மாநாட்டில், இன்று மாலை ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்றுகாலை 11.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு 4 மணிக்கு நடைபெறும் அந்த கருத்தரங்கில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் உரையாற்றுகின்றனர். ஸ்டாலின், பினராயி விஜயனை தனியாகச் சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று இரவே ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.