அடக்கடவுளே!! அப்படியே விழுங்கி துப்பிய திமிங்கலம்…தொண்டை வரை சென்று உயிருடன் திரும்பி வந்த அதிசய மனிதர்..!!

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் திமிங்கலத்தால் முழுங்கப்பட்ட பின்னரும் உயிருடன் வந்த அதிசய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மஸாச்சூஸெட்ஸ் மாகாணத்தில் உள்ள ப்ரொவைன்ஸ்டவுன் நகரைச் சேர்ந்தவர் மைக்கெல் பேக்கர்ட் (54). மீனவரான இவர், தொழில்முறையாக ‘லாப்ஸ்டர்’ வகை மீன்களை கடலுக்கு சென்று பிடிப்பவர் ஆவார்.

பொதுவாக, லாப்ஸ்டர் மீன்கள் கடலுக்கு அடியில் இருக்கும் மணல் திட்டில் வாழக்கூடியவை ஆகும். இதனால் சாதாரணமாக படகில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களின் வலைகளில் இந்த வகை மீன்கள் சிக்காது. இந்த லாப்ஸ்டர் மீன்களை பிடிப்பதற்கே ஒவ்வொரு நாட்டிலும் சில நபர்கள் இருக்கின்றனர். தூத்துக்குடியில் கடலில் இருந்து முத்துகளை எடுக்க தொழில்முறையாக சிலர் இருக்கிறார்கள் அல்லவா. அதுபோலவே லாப்ஸ்டர் மீன்களை பிடிக்கவும் சில நபர்கள் இருக்கின்றனர். மிகவும் அரிதாக கிடைக்கும் மீன்கள் இருப்பதால் உலகெங்கும் லாப்ஸ்டர் மீன்களுக்கு ‘டிமாண்ட்’ அதிகம்.

சரி.. நம் கதைக்கு வருவோம். மேலே கூறிய மீனவர் மைக்கெல் பேக்கர்ட் சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல லாப்ஸ்டர் மீன்களை பிடிக்க கடலுக்கு தனது நண்பர்கள் இருவருடன் சென்றார். படகில் நடுக்கடலுக்கு சென்றதும் க்யூபா டைவிங் (cuba diving) உடையையும், ஆக்சிஜன் மாஸ்கையும் மாட்டிக் கொண்டார். பின்னர் கடலில் குதித்துள்ளார். தொடர்ந்து கடலுக்கு அடியில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அனைத்தும் இருட்டாகிவிட்டது. வழக்கமாக 100 அடி ஆழத்துக்கு கீழ் சென்றால் தான் சூரிய ஒளி இல்லாமல் கடல் இருட்டாகி விடும். ஆனால் தான் 20 அடி தானே வந்திருக்கிறோம். அதற்குள் எப்படி இருட்டாகிவிட்டது என யோசித்துக் கொண்டே தனது தலையில் கட்டியிருக்கும் டார்ச் லைட்டை ‘ஆன்’ செய்தார்.

அப்போது அவர் அருகே ராட்சத பற்கள் தென்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். மைக்கெல்லின் உயிரே போய்விட்டது. பெரிய சுறாவின் வாயில் சிக்கிக் கொண்டோம் என நினைத்த அவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக அங்குமிங்கும் தத்தளித்திருக்கிறார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. மீனின் தொண்டைக் குழிக்கு அருகே சென்றதும், திடீரென என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர் மயக்கமடைந்து விட்டார்.

இந்நிலையில், அந்த மீன் என்ன நினைத்ததோ.. திடீரென கடலின் மேற்பரப்புக்கு வந்து அவரை வெளியே துப்பிய அதே வேகத்தில் ஒரு டைவ் அடித்து மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டது. இதை பார்த்த மைக்கெல்லின் நண்பர்கள் பயத்தில் அலறினர். ஏனெனில், மைக்கெல்லை துப்பிவிட்டு சென்றது 60 அடி நீளம் கொண்ட ராட்சத ஹம்ப்பேக் திமிங்கலம் ஆகும். பின்னர் அவரது நண்பர்கள், மயக்கமுற்ற நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த மைக்கெல்லை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திமிங்கலம் லேசாக அவரை மென்றுள்ளதால் அவரது தசைகள் நசுங்கி இருப்பதாகவும், அதனால் அவர் மூச்சுவிட திணறுவதாகவும் தெரிவித்தனர். பின்னர் இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மைக்கெல் பூரண குணமடைந்தார். அதன் பிறகுதான், தான் மாட்டியது சுறாவின் வாயில் அல்ல; திமிங்கலத்தின் வாய் என்பது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து மைக்கெல் கூறுகையில், “அந்த நாளினை என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது. டார்ச் லைட் வெளிச்சத்தில் பற்களை பார்த்த போது சுறா மீனின் வாய்க்குள் சென்றுவிட்டோம் என நினைத்தேன். எவ்வளவோ முயன்றும் என்னால் வெளியே வர முடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அதன் தொண்டைக்கு அருகே போய்விட்டேன். இன்றுடன் எனது கதை முடிந்துவிட்டதாகவே எண்ணினேன். எனது மகளின் முகம் மட்டுமே அப்போது என் நினைவுக்கு வந்தது. பின்னர் திடீரென என்ன ஆனது என தெரியவில்லை. நான் மயங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால், என் நண்பர்களுடன் படகில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் எனது நண்பர்கள், திமிங்கலம் என்னை வெளியே துப்பிவிட்டு சென்றதாக கூறினர். இது கடவுளின் கிருபை இல்லாமல் நடந்திருக்காது. நல்ல வேளை.. நான் சுறாவிடம் சிக்கவில்லை. சுறாவிடம் மாட்டி இருந்தால் அது என்னை பற்களால் கிழித்து கொன்றிருக்கும்” என்றார்.