அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் உறுதி..!

சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சளியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. புதுவையில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த காய்ச்சல் அதிகரிப்பால் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு காய்ச்சல் தீவிரமாக  இல்லை என அமைச்சர்கள் மா சுப்பிரமணியனும் அன்பிலும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை இரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்பேரில் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரல் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அவருக்கு இன்புளூயன்சா வைரஸ் இருப்பது தெரியவந்தது. தற்போது அன்பில் தனிமையில் இருக்கிறார். அவரது உடல் சீராக உள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார். நேற்றைய தினம் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.