பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் சென்னையில் மட்டும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு இருப்பதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல், அதற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதனுடைய துணை அலுவலகங்கள் என சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த பாதுகாப்பு பணி போடப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது தேசிய புலனாய்வு பிரிவு கடந்த வாரம் இந்தியா முழுவதுமாக பல்வேறு சோதனை நடத்தினர். இந்த சோதனை அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதற்கான ஆவணம் உள்ளதாக கூறி நடத்தப்பட்டதாகவும், அதன் மூலமாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், pfi அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் மத்திய அரசானது “பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” என்று அமைப்பை தடை செய்து உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நான்காயிரம் காவல் துறையினர் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.