ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் – அமைச்சரவை ஒப்புதல்..!

ன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பரவலானது. முதலில் சில நூறு ரூபாய்களை வெல்வது போல இருக்கும் ஆன்லைன் ரம்மி, போகப் போக விளையாடுபவரை அடிமையாக்கும். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் பல லட்சத்தை இழக்க நேரிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் களத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வலுத்தது. இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு கடந்த ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வருவது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.