மேட்டுப்பாளையத்தில் கடையை பூட்டக்கோரி உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 31 பேர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி, வி.எச்.பி. மற்றும் பா.ஜனதா கட்சி சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. ஒரு சிலர் கடைகளை திறந்து வைத்து இருந்தனர்.

மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஒருவர் தனது பெட்டிக்கடையை திறந்து வைத்து இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜனதா உறுப்பினர் மேட்டுப்பாளையம் காந்தி நகரை சேர்ந்த ரங்கநாதன் (வயது52) என்பவர் அங்கு இருந்த கல்லை எடுத்து பெட்டிக்கடை உரிமையாளரை மிரட்டி உள்ளார். மேலும் கடையை பூட்ட வில்லை என்றால் சேதப்படுத்தி விடுவதாக மிரட்டி உள்ளார்.

இது குறித்து கடையின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையை பூட்ட கோரி பெட்டிக்கடை உரிமையாளரை மிரட்டிய ரங்கநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதே போல கடையை பூட்ட கோரி மிரட்டிய பா.ஜனதா உறுப்பினர் நந்தா கிருஷ்ணன் (43), பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால்(37) உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்த 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியை சேர்ந்த முருகன் (44), மற்றும் உறுப்பினர்கள் சக்தி நகரை சேர்ந்த திவாகர் (34), வீரபாண்டி பிரிவை சேர்ந்த பிரகாஷ் (27), சுனில் (32) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விக்னேஷ் (23), ஹேமராஜ் (22), ரித்திக் (22), தீபக் (17) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.