அடுத்த சொர்ணக்கா… திமுக கவுன்சிலரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற பெண் தாதா… காஞ்சிபுரத்தில் பயங்கரம்..!!

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கவுன்சிலரை பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நடுவீரப்பட்டு கிராமத்தில் 7-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சதீஷ்(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரி (43) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

லோகேஷ்வரி அந்தப் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு அங்கு ஒரு தாதாவை போல வலம் வந்துள்ளார் அவ்வப்போது லோகேஷ்வரியின் ஆதரவாளர்களுக்கும், கவுன்சிலர் சதீஷின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் லோகேஷ்வரியும், அவரது ஆதரவாளர்களும் கள்ளச்சந்தையில் மது விற்று வந்ததாக தெரிகிறது.

இவ்வாறு கள்ளச்சந்தையில் மது விற்பதை கைவிடுமாறு கவுன்சில் சதீஷ், லோகேஷ்வரி ஆதரவாளர்களிடம் பல முறை கூறி இருக்கிறார். ஆனால், அவர்கள் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் கவுன்சிலர் சதீஷ் அண்மையில் புகார் அளித்தார். இதனால் லோகேஷ்வரின் ஆதரவாளர்கள் கள்ளச்சந்தையில் மது விற்பதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த லோகேஷ்வரி கவுன்சிலர் சதீஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று இரவு சமாதானம் பேசுவதாக கூறி கவுன்சிலர் சதீஷை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார் லோகேஷ்வரி.

அதனை நம்பி அவரது வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது லோகேஷ்வரியும், அவரது ஆதரவாளர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சதீஷை சரமாரியாக வெட்டினர். இதையடுத்து, உயிரை காப்பாற்றுவதற்காக சதீஷ் அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் துரத்திச் சென்று அவரை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து சதீஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரை கொலை செய்த லோகேஷ்வரி உட்பட அவரது ஆதரவாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. கவுன்சிலரின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.