ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் ஆப்கானில் இல்லை என மறுக்கும் தாலிபான் !
ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆப்கானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி குற்றம் சாட்டி உள்ளார்.
ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பானது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட நாடுகளும் ஐநா, பிரிக்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகும்.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மசூத் அசார் விவகாரம் இனி இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள் தொடர்புடைய விவகாரம் என பேசியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாளிதழில் மசூத் அசார் ஆப்கானில் பதிந்திருப்பதாகவும் அவரை கண்டுபிடித்து கைது செய்து தகவல் தெரிவிக்குமாறும் ஆப்கானின் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியதாக செய்தி வெளியானது.
கடந்த புதன்கிழமை பதிலளித்த தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் “பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித கடிதமும் அனுப்பப்படவில்லை எனவும் அந்தச் செய்தியை முழுமையாக மறுப்பதாகவும்” தெரிவித்திருந்தார்.
ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் ஆப்கானில் இல்லை எனவும் அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் அந்நாட்டில் தான் செயல்பட முடியும் எனவும் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக செயல்படுவதற்கு ஆப்கான் மண்ணை பயன்படுத்த தாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.