ஜெனிவா: கொரோனா தொற்றுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மருந்துகளை பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
கொரோனா தொற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்த இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று WHO அறிவித்திருந்தது.
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 61.58 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 59.50 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல 65.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில்தான் அதிகபட்சமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மருந்துகள் பல அவசர பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டன. இவ்வாறு அனுமதியளிக்கப்பட்ட மருந்துகளில் 2 மருந்துகளை இந்த அவசரக்கால பயன்பாட்டு பட்டியலிலிருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.
சோட்ரோவிமாப் மற்றும் காசிரிவிமாப்-இம்டெவிமாப் ஆகிய இரண்டு ஆன்டிபாடி மருந்துகள் கொரோனா காலகட்டங்களில் சிறந்த நோயெதிர்ப்பு மருந்துகளாக பயன்படுத்தப்பட்டன. அதாவது, ஆன்டிபாடி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘சோட்ரோவிமாப்’ மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த ஜனவரியில் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதன் மூலம் கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்றும், இணை நோய் உள்ளவர்களும் இதனை பயன்படுத்தலாம் என்றும் WHO அறிவித்திருந்தது.
கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்து WHO மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டதில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு BMJ எனும் இதழில் வெளியிட்டது. இதில், “கடந்த காலங்களில் பரிந்துரை செய்யப்பட்ட சோட்ரோவிமாப் மற்றும் காசிரிவிமாப்-இம்டெவிமாப் ஆகிய இரண்டு ஆன்டிபாடி மருந்துகள் இனி கொரோனா சிகிச்சை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தது.
இதற்கான காரணத்தையும் WHO விளக்கியுள்ளது. அதாவது இதற்கு முந்தைய அலையில் இந்த மருந்துகள் கொரோனா வைரசின் ஸ்பைக் புரதம் எனப்படும் அம்சத்திற்கு எதிராக செயலாற்றியது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவலாக பரவிய நிலையில் இந்த மருந்து இதனை எதிர்த்து வேலை செய்யாது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று WHO கூறியுள்ளது. ஏற்கெனவே காசிரிவிமாப்-இம்டெவிமாப் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் WHO அறிவித்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.