புுளோரிடா: நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் ‘ Artemis’ திட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Artemis என்ற திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இறங்கியுள்ளது. முதற்கட்டமாக ஓரியன் என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி பரிசோதிக்க நாசா திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டம் Artemis – 1 என அழைக்கப்படுகிறது. கடந்த மாதம் 29ம் தேதி விண்கலத்துடன் SLS ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஏவுதலுக்கு சற்று நேரத்திற்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு கடந்த 3ம் தேதி SLS ராக்கெட் நிலவுக்கு அனுப்பப்படவிருந்தது. ஆனால் கவுன்டவுன் தொடங்குவதற்கு முன்னரே ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிந்ததால் Artemis – 1 திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து SLS ராக்கெட்டை வரும் 23ம் தேதி நிலவுக்கு அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் முன்னர் ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகளை சரிசெய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று பொறியாளர்கள் குழு கேட்டுக்கொண்டது. இதையடுத்து Artemis – 1 திட்டத்தை 3வது முறையாக நாசா ஒத்திவைத்திருக்கிறது. இந்நிலையில் வரும் 27ம் தேதி SLS ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.