அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாதவர்… கடுமையாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

டந்த 2011 – 2016 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், பணத்தைத் திருப்பிக் கொடுத்து புகாரளித்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்ததால், மேற்படி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்ட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.வி.செந்தில்நாதன், “வழக்கில் மறுபடியும் செந்தில் பாலாஜி சிக்கியிருப்பதால், அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், உடனே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல்வர் இதில் தலையிட்டு செந்தில் பாலாஜி வகிக்கும் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். வரும் ஞாயிறு இரவு வரை நேரம் தருகிறோம். அதற்குள் பதவி விலகவில்லையென்றால், எங்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், வரும் திங்கள் கிழமை கரூரில் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கரூரில் மூன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார் செந்தில் பாலாஜி. அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் இன்று மூன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கியிருக்கிறோம். கரூரில் சிறு, குறு தொழில்களைச் சார்ந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கில், அந்தத் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, தொழில்முனைவோர்கள் வைத்த பல கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச்சென்று, நிறைவேற்றியிருக்கிறார். சிட்கோவில் அனைத்துத் தொழில்களும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார். அதேபோல், இந்த ஆண்டு சட்டமன்றத்தில் இன்னும் 50,000 பேர்களுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் கரங்களால் அதையும் வழங்கவிருக்கிறோம். அதற்கான, எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டுவருகின்றன. விவசாயிகள் குறித்த கணக்கீடும் எடுக்கப்பட்டுவருகிறது.

கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் என்னைப் பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருப்பது குறித்துக் கேட்கிறீர்கள். ஏற்கெனவே, பா.ஜ.க-வில் மாநிலப் பொறுப்பில் இருக்ககூடியவர், வேலை வெட்டி இல்லாதவர். அப்படி, மாநிலப் பொறுப்பில் இருப்பவரே வேலை வெட்டி இல்லாதவரா இருக்கிறப்ப, மாவட்டத்தில் இருப்பவர் எப்படி இருப்பார். அதாவது, படிச்சவர் மாதிரியே காட்டக்கூடிய, படிச்ச முட்டாள்.

அந்த வழக்கு சம்பந்தமா நீதிமன்ற உத்தரவிலுள்ள ஷரத்துகளைப் படிச்சு பார்க்கச் சொல்லுங்க. படிக்கத் தெரியலைன்னா, படிச்ச வழக்கறிஞர்கிட்ட கொடுத்து, அதுல என்ன தீர்ப்பு சொல்லப்பட்டிருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் பேசச் சொல்லுங்க. ஆனால், அதைப் பத்தி தெரியாதவர் சொல்றதை, நீங்களும் செய்தியா வெளியிடுறீங்க. தீர்ப்பு வந்திருச்சா முதல்ல. நீங்க என்ன கேட்டிருக்கணும், தீர்ப்போட நகல் உங்க கையில இருந்தா கொடுங்கனு கேட்டிருக்கணும். கேட்டிருக்கலாம்ல.அப்படி, தீர்ப்போட நகல் அவர் கையில் இருந்து, அந்தத் தீர்ப்புல உள்ள சாராம்சத்தை அவர் உங்ககிட்ட சொல்லியிருந்தார்னா, நீங்க என்கிட்ட கேட்டால் பரவாயில்லை. ஆனா, நீதிமன்றத்தோட தீர்ப்போட நகலே உங்க கையிலும் இல்லை. சொன்ன நபர் கையிலும் இல்லை.

ஆனா, ஏதோ ஒரு கருத்தைச் சொல்லணும்னு சொல்றவங்ககிட்ட, நீங்க திருப்பி இன்னொரு கேள்வியை கேட்டிருக்கணும். அதாவது, விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஒன்றிய அரசோட அமைச்சர் ஒருவரின் மகன், எத்தனை விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக் கொன்றார். அந்த அமைச்சர் பதவி விலக வேண்டி நீங்க கேப்பீங்களா, போராட்டம் நடத்துவீங்களானு அவர்கிட்ட கேட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். அப்படி கேட்கலைன்னா பரவாயில்லை, அடுத்தமுறை அவரைச் சந்திக்கும்போது இதை கேளுங்க. அடுத்தமுறை யாராச்சும் பேட்டி கொடுத்தாங்கன்னா, அரசின் மீது குறை சொன்னாங்கன்னா, `அதற்கான ஆதாரங்களை கையில் கொடுங்க, நீதிமன்றத் தீர்ப்பு இருந்தா கையில் கொடுங்க’னு சொல்லிக் கேளுங்க. ஒண்ணே ஒண்ணு என்னனு கேட்டீங்கன்னா, ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் சரிவர விசாரிக்கப்படவில்லை. ஆகையால், தமிழகத்தில் விசாரணையை ஆரம்பகட்டத்திலிருந்து முறையா விசாரிக்கணும்னு சொல்லியிருக்காங்க. அது உயர் நீதிமன்றம் விசாரிக்கணும்னு தீர்ப்புல சொல்லலை. அதனால், கருத்து சொன்ன நபருக்கு தீர்ப்போட நகலை அவரோட மாநிலத் தலைவர் போலவே படிக்கத் தெரியலன்னா, படித்த திறமைசாலியான வழக்கறிஞர்கிட்ட கொடுத்து, அதுல என்ன கருத்துகள் இடம்பெற்றிருக்குனு பார்த்துட்டு, அதற்கான விளக்கங்களையும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, அப்புறம் கருத்து சொல்லட்டும்” என்றார்.