சர்ச்சை ஏற்படுத்திய இரட்டை கழிப்பிடம் குழந்தைகளுக்கானது- கோவை மாநகராட்சி அதிகாரி விளக்கம்..!

கோவை மாநகராட்சி 66-வது வார்டு அம்மன்குளம் பகுதியில் பொதுகழிப்பிடம் ஒன்று உள்ளது.

இதில் உள்ள ஒரு கழிப்பிட அறையில் 2 கழிப்பிடங்கள் உள்ளது. ஒரே அறையில் 2
கழிப்பிடங்கள் அருகருகே நடுவில் எந்த தடுப்பும் இல்லாமல் இருந்தது. இந்த
இரட்டை கழிப்பிட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவு சர்ச்சையை
ஏற்படுத்தியது. பலரும் மீம்ஸ் வாயிலாக கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஷர்மிளா ஒரு செய்தி
குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி 66-வது வார்டு அம்மன்குளம் பகுதியில் கழிப்பிடம்
1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும்
கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் கூடுதலாக சிறுவர்களுக்கும்
கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள், பெரியவர்களின் கண்காணிப்பில் கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகள் உள்புறம் தாழிட்ட பின்னர் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.

இந்த கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. அமைக்கப்பட்ட கழிப்பிடம்
சிறுவர்கள் உபயோகப்படுத்தாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான
சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக
மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.