உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா… வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர் நகரம்… டிராக்டர்களில் ஆபீஸ் சென்ற ஐடி ஊழியர்கள்..!!

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கொட்டும் மழை காரணமாக ஐடி ஊழியர்கள் டிராக்டரில் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் பல இடங்களில் மிகத் தீவிரமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகளா என்று தெரியாத அளவுக்கு மழை நீர் வெள்ளம் போல அடித்துச் செல்கிறது.

இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூர், ஆயிரக்கணக்கான டெக் ஸ்டார்ட்அப்களை கொண்டதாகும். மேலும், நாட்டின் 105 யூனிகார்ன்களில் குறைந்தது 40 பெங்களூரில் தான் இருக்கிறது. இப்படி நாட்டின் ஐடி ஹப்பாக இருக்கும் பெங்களூரில் இன்று (செப்டம்பர் 5) கனமழை வெளுத்து வாங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 131.6 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் அங்கு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையில் இருந்தே பெங்களூர் இப்போது தான் மெல்ல மீண்டு வந்த நிலையில், இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வாகனங்களே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

கனமழை வரும் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என முன்கூட்டியே அறிவித்துவிட்டது. ஆனால், பல நிறுவனங்கள் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை இதனால் பல ஐடி ஊழியர்கள் வேறு வழியின்றி அலுவலகத்திற்குச் சென்றனர். பெங்களூரில் பல பகுதிகளில் இருக்கும் ஐடி ஊழியர்கள் இப்படித்தான் அலுவலகம் சென்றுள்ளனர். இதற்காக டிராக்டர்கள் ஒரு நபருக்கு தலா ₹50ஐ வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பெங்களூர்வாசி ஒருவர் கூறுகையில், “மழைக்கா எங்களால் தொடர்ச்சியாக இத்தனை லீவ்கள் எடுக்க முடியாது. அலுவலக பணிகள் பாதிக்கப்படும். இதனால் நாங்கள் ஆபீசுக்கு டிராக்டரில் செல்கிறோம். இதற்கு அவர்கள் 50 ரூபாயைக் கட்டணமாக வாங்குகிறார்கள்” என்றார். ரெயின்போ டிரைவ் லேஅவுட், சன்னி புரூக்ஸ் லேஅவுட், சர்ஜாபூர் சாலையில் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளனர்.

இந்த கனமழை காரணமாகப் பெங்களூரில் பல முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில கிமீ தூரத்தைக் கடக்கவே மணிக் கணக்கில் நேரம் ஆனது. மேலும், பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிக்கள் போதிய அளவு இல்லாததால் நகரமே முடங்கியது. சாலைகளில் நீர் அதிகம் தேங்கி இருந்ததால், மக்களால் நடந்தும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

டிராக்டர் செல்ல முடியாத இடங்களில் சிறிய படகுகள் மூலம் மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் கன மழை தொடரலாம் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளதால், இது பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு வசித்த மக்களில் பலர் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.