மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 .. முதல்வர் ஸ்டாலினின் புதுமைப்பெண் திட்டம்- அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்..!!

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று 3 நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ மாற்றப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படும்.

அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடக்க உள்ளது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தொடக்க விழாவில் விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு சென்னை வந்தார். 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளை கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

புதுமைப்பெண் திட்டம் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம், என்று கூறினார். இந்த திட்டம் இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளது. பல மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இது பார்க்கப்படுகிறது. விரைவில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு கூறி உள்ள நிலையில், இந்த புதுமைப்பெண் திட்டம் முதல் கட்டமாக அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி வருடத்திற்கு செலவு செய்யப்படும். 1 லட்சம் மாணவிகள் முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர்.

அவர்களுக்கு இன்றில் இருந்து பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது டெல்லியில் இருக்கும் பள்ளிகளை நேரில் பார்வையிட்டார். அவர்களின் அரசு பள்ளிகளின் தரத்தை பார்வையிட்டார். இந்த பள்ளிகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தார். இந்த நிலையில்தான் அதே மாடலில் தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் இன்று தொடங்கப்படுகிறது.