தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு.
ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், ஓபிஎஸ்-க்கு பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், முன்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், தற்போது இபிஎஸ்-க்கு சாதகமாகவும் மாறி, மாறி வந்த தீர்ப்பால் அதிமுகவை முடக்கம் சூழல் ஏற்படலாம் என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து அதிமுக யார் பக்கம் என சொல்ல முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக இருக்காது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்தது இறுதி தீர்ப்பல, தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.