திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 321 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிக்கட்ட பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கின்ற 106 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு, நிரந்தரமான வீடுகள், குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 7,469 வீடுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், வீடுகள் கட்டும் திட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தோட்டனுாத்து, அடியனுாத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நுாலகம், பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைவாகவும், திருப்திகரமாகவும் நடைபெற்று வருவகிறது. இதேபோன்ற வடிவமைப்பில் மற்ற மாவட்டங்களிலும் பணிகள் தொடர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.