கோவை: மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி பெயரில் சொத்து குவித்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பத்திரப் பதிவுத்துறையில் 19 ஆண்டுகளாக பணியாற்றியவர் செல்வக்குமார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடைசியாக கோவை மாவட்ட பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது துறை ரீதியான புகார்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்வகுமாருக்கு முகில் என்ற மனைவி இருக்கிறார். முகிலின் சகோதரியான தென்றல், காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் தாய் பாண்டியம்மாள் ஓய்வூதியம் பெறுபவர்.
இந்த நிலையில் செல்வக்குமார், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ஸ்ரீ வராகமூர்த்தி அவென்யூவில் மனைவியின் சகோதரியான தென்றலின் பெயரில் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வகுமார் 2009ம் முதல் 2012 வரை, மாமியார் பாண்டியம்மாள் மற்றும் மனைவியின் சகோதரி தென்றல் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டியம்மாள், தென்றல் ஆகியோரது சொத்துக்களின் மதிப்பு 2009ல் வெறும் ரூ.11.46 லட்சமாக இருந்தது. இந்த சொத்து மதிப்பு, 2012ல் ரூ.89.82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் இருவரின் வருவாய் ஆதாரங்கள் அடிப்படையில் ரூ.27.20 லட்சம் வருவாய் கிடைத்திருக்க முடியும். ஆனால் வருவாய்க்கு அதிகமாக ரூ.65.87 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செல்வக்குமார், அவரது மாமியார் பாண்டியம்மாள், மனைவியின் சகோதரி தென்றல் ஆகியோர் உண்மையான வருவாய் ஆதாரத்தை காட்டிலும், 242 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கியது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு சட்டங்களின் அடிப்படையில், மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், அவரது மாமியார் பாண்டியம்மாள், மனைவியின் சகோதரி தென்றல் ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், முந்தைய அதிமுக ஆட்சியின் போது பத்திரப் பதிவுத்துறையில் சர்வ பலத்துடன் வலம் வந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் பணியாற்றிய 19 ஆண்டுகளும் கோவை மாவட்டத்தில் பணியில் இருந்துள்ளதால், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என முக்கிய புள்ளிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவை மாவட்ட முக்கியப் புள்ளிகள் பலரும் பத்திரப்பதிவு செய்வது என்றால் செல்வக்குமாரை தான் தொடர்பு கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள், முக்கியப் புள்ளிகள் பலருடன் செல்வக்குமாருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பதிவாளரான செல்வக்குமார் மீதான புகார்களில் விசாரணை சூடு பிடித்தது. துறை ரீதியாக இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். அதன் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவினருக்கு நெருக்கமாக இருந்த பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.