உபி மதுரா கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி இருவர் பலி- 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள பாங்கே பிஹாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில், மூச்சுத்திணறி இருவர் பலியானதுடன் 6 பேர் நிலை கவலைக்கிடமாகி விட்டது.

நேற்று நாடு முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இங்குள்ள பிருந்தாவனின் பாங்கே பிஹாரில் கோயிலும் மிகவும் பிரபலமானது. இதன் உள்ளே நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பக்தர்கள் குவியத் துவங்கினர்.

இக்கோயிலினுள் இடமும் சற்று குறைவு என்பதால் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இச்சூழலில் நேற்று மதியம் சுமார் 2.00 மணிக்கு நடந்த சிறப்பு பூசையின் போது மேலும் கூட்டம் அதிகரித்தது.

இதில் வெளியில் செல்ல இருக்கும் வாயில் எண் 4 முன் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உண்டானது.

இதனால், அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறும் முன்பாகவே பரிதாபமாகப் பலியாகினர். உயிரிழந்த மூதாட்டி, நொய்டாவை சேர்ந்த நிர்மலா தேவி (80) எனவும் ஆண், மத்தியப்பிரதேசம் ஜபல்பூரின் ராம் பிரசாத் விஸ்வகர்மா (65) என்றும் தெரிந்துள்ளது.

இதே கோயிலில் 6 பேர் நெரிசலால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பலரும் சிகிச்சைக்கும் பின் வீடு திரும்பி விட்டனர்.

ஜென்மாஷ்டமிக்காக மதுராவிற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்திருந்தார். இந்த தகவலை கேள்விப்பட்டு அதிர்ந்தவர், பலியானவர்களுக்கு தன் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

பாங்கே பிஹாரில் கோயிலில் இந்த சமபவம் நடைபெற்ற போது, மதுராவின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையின் எஸ்எஸ்பியும் அங்கிருந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பரவலால் தடைகளுக்கு ஆளாகி இருந்த மதுராவின் கோயில்கள் இந்தவருடம் வழக்கம் போது திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.