ராமநாதபுரம்: வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக. விசைப்படகுகளுக்கு மீன்பிடி இன்று அனுமதி டோக்கன் வழங்கபடாததால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 310 கி.மீ.,லும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ.,லும், சாகர் தீவு தென் கிழக்கில் 210 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள வட மேற்கு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகத்தின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் ஆண்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம், ராமேஸ்வரம் பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்வதற்கு அனுமதி டோகன் வழங்கப்படாததால் மீனவர்களின் விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இபோல், நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படாததால், மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மீன்பிடிக்க அனுமதி வழங்காததால் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.