இனி சினிமா பட மாதிரி பேருந்தில் பாட்டு பாட முடியாது… அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இதோ..!!

பேருந்துகளில் ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ள கூடாது என்பனவற்றில் மோட்டார் வாகன விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தங்களைச் செய்துள்ளது.

சென்னை: தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலான காதல் காட்சிகளில் முக்கிய இடம் வகிப்பது பேருந்துகள் தான். தமிழ் சினிமாவில் பேருந்தும், பேருந்து நிலையங்களும் என்ற தலைப்பில் தனி ஆய்வே மேற்கொள்ளலாம். அந்த அளவிற்கு, அந்த காலம் முதல் இந்த காலம் வரை அத்தனை காட்சிகள் இங்கு குவிந்து கிடக்கின்றன.

நிஜத்தில் இருந்து திரைப்படமாக உருபெறுகிறதா அல்லது படத்தில் காண்பிப்பதை நிஜத்தில் செய்கிறார்களா என்பது தனிக்கதை. இப்படியிருக்க, இத்தனை ஆண்டுகளாக திரைப்படங்களில் காட்சிகளாக வைக்கப்பட்டு வந்த அத்தனை அம்சங்களுக்கு அரசு தற்போது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, பயணிகள் பேருந்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள், பின்வருமாறு…

  • பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை நோக்கி முறைத்து பார்ப்பது, கூச்சலிடுவது, விசில் அடிப்பது, கண்ணடிப்பது, பாலியல் ரீதியாக புண்படுத்தும் வகையிலான சைகளை காண்பிப்பது, பாட்டு பாடுவது, புகைப்படங்கள், காணொலிகள் எடுப்பது, வேறு வகையிலான மின்னணு தொடர்பு மூலம் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கூடாது.
  • நியாயமான காரணங்களை தவிர, உதவி செய்வதாகக் கூறி எந்தவொரு பெண் பயணியையும் அல்லது சிறுமியையும் தொட்டு பேருந்தில் இருந்து ஏற்றிவிடவோ, இறக்கிடவோ ஆண்களுக்கு அனுமதியில்லை.
  • பெண்களிடம் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு போகிறார்கள் போன்ற விவரங்கள் கேட்பதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை.
  • குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகளை தொந்தரவு செய்யும் வகையில் ஆண்கள் எவ்விதமான செயல்களிலும் ஈடுபடவேக் கூடாது.
  • மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ஆண் பயணிகள் நடந்துகொண்டால், அவர்களை பேருந்தில் இருந்து இறக்கிடலாம்.
  • பயணம் செய்யும் பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு அளிக்கும் சக பயணிகளை, அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

இவற்றில் சில விதிகள் முன்பிருந்தே சட்ட விரோதம் என்றாலும், அவை சட்டத்தில் முறையாக குறிப்பிடப்படவில்லை என்பதாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் சுழலை உணர்ந்து இச்சட்டத் திருத்ததைக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன்மூலம், திரைப்படங்களில், பேருந்தில் பாடல் காட்சிகளையோ, அத்துமீறும் காதல் (?) காட்சிகளையோ வைத்தால் அவையும் சட்ட விரோதம் என கருதப்படலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.