பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமா ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 78. ந.சு. சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4வது மகனாக கடந்த 1946 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவர். பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்று தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக பலமுறை செயல்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் இளம் வயது முதலே கட்சியில் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருமுறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். 1996ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டவர். சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியவர். பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த நிலையில் பிரச்சாரத்திற்காக அவர் நெல்லை வருகை தந்தபோது இவரது வீட்டில் மதிய உணவு எடுத்துக்கொண்டார்.