கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் இவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் நேற்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவியின் மரணம் தொடர்பாக தகவல் வந்தபோது கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனையில் இருந்ததாகவும், தகவல் அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொள்ளும் எனவும் தங்கள் தரப்பு, நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் உரிய நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் மாணவியின் தாய் செல்வியிடம் தொலைப்பேசியில் கூறியதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவத்தார்.