தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்றார் ராகுல்.. 67க்குப் பிறகு நீங்களே தமிழகத்தை ஆளவில்லையே என்று பதிலடி தந்துள்ளார் மோடி..
நாடாளுமன்றம் வாதப் பிரதிவாதங்களால், தமிழ் சினிமா நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி போல பரபரக்கிறது..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சி மயமான தனது பேச்சால் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார். குறிப்பாக, இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்புதான் (அதாவது திமுக திரும்பத் திரும்ப சொல்வது போல ஒன்றியம் தான்). இதில் நீங்கள் மாநிலங்கள் மீது எதேச்சாதிகாரம் செலுத்த முடியாது என்றார். ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனித்துவத்தோடும், கலாசாரத்தோடும், அடையாளத்தோடும் உள்ளது. அதை மதிக்காத அரசு மக்களால் தூக்கி எரியப்படும் என்றார். இது அனைத்து துறைகளிலும் ஒரே நாடு கொள்கையை பின்பற்றும் பாஜக அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இவற்றை எல்லாம் விட பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது தமிழ்நாட்டைப் பற்றி ராகுல்காந்தி சொன்னதுதான். ‘உங்களால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆளவே முடியாது. தமிழ் மக்கள் பாஜகவை எப்போதும் ஏற்கமாட்டார்கள்’ என்று ஒரே போடாக போட்டார் ராகுல்.
‘ராகுல் ‘மோடி வரமாட்டார்’ என்றார், மோடி 2014ல் ஆட்சிக்கு வந்தார். மீண்டும் ஆட்சியை பிடிக்கவே முடியாது என்று மீண்டும் சொன்னார், 2019ல் அதிக பெரும்பாண்மையோடு ஆட்சிக்கு வந்தோம். இப்போது தமிழ்நாட்டை ஆளவே முடியாது என்கிறார். அவரது வாய்முகூர்த்தம் எப்பவும் எங்களுக்கு சாதகம் தான். அவரால் தான் நாங்கள் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம்’ என்று உடனடியாக பதில் சொன்னார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு ‘கூடவே இருந்து நல்லா செய்யுறீங்களே’ என்பது போல அதிமுக தொண்டர்கள் ரியாக்ட் செய்தனர். இப்போது மோடி நாடாளுமன்றத்திலேயே ராகுல் பேச்சுக்கு பளார் ரகத்தில் பதிலடி தந்துள்ளார்.
‘1962ம் ஆண்டில் கடைசியாக காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டது. அதன் பிறகு 1967ல் ஆட்சியில் இருந்து தமிழக மக்கள் காங்கிரஸை தூக்கி எரிந்தார்கள். இன்றுவரை மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. 60 ஆண்டுகளாக தமிழக மக்கள் உங்களைதான் புறக்கணித்து வைத்துள்ளனர்’ என்று மோடி சொன்ன பதிலால் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் எம்.பிக்கள், குறிப்பாக தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் முகம் இறுக்கமாக்கமாகிவிட்டதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றியோ தோல்வியோ, கட்சியை அடிமட்டத்தி இருந்து பலமாக்க உதவும் என்று தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது தமிழக பாஜக. 2026 தேர்தலை நோக்கிய காய்நகர்த்தலில் தமிழக பாஜக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் – குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் மோடியே நமக்காக நாடாளுமன்றத்தில் பேசிவிட்டார் என்ற உற்சாகத்தை கொடுத்துள்ளது இன்றைய சம்பவம்.. தரமான சம்பவம் தான்..!