கோவை ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 24). கூலி தொழிலாளி.
இவரது நண்பர் அஸ்வின். அஸ்வின் மீது கஞ்சா விற்பனை, அடிதடி வழக்குகள்
உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தினபுரியை சேர்ந்த
காட்சன் என்பவரை அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி உள்ளார்.
இதுகுறித்து வழக்கு ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இதனால் காட்சனுக்கும், அஸ்வினுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இருவரும் மாறி மாறி மிரட்டி கொண்டனர். சம்பவத்தன்று ஆகாஷ் தனது நண்பர்
வினோத், அப்பு ஆகியோருடன் கண்ணப்பநகர் சென்றார்.
அப்போது ஆகாசை பார்த்த காட்சன் மற்றும் அவரது நண்பர் நெய் அஜித், தில்லை
தீபக் ஆகியோர் அவரை பின் தொடர்ந்தனர். துடியலூரை அடுத்த சங்கனூர் வரை
அவர்களை பின் தொடர்ந்தனர்.
அங்கு ஆள்நடமாட்டம் இல்லாததை பார்த்த காட்சன், அஸ்வினை பழிவாங்க ஆகாசை
தாக்க முடிவு செய்தார். உடனே தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆகாசை தடுத்து
நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதும் காட்சன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாறியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து காட்சன் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி
சென்றார். பலத்த காயம் அடைந்த ஆகாசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆகாஷ் துடியலூர் போலீசில்
புகார் அளித்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காட்சன், நெய் அஜித், தில்லை தீபக் ஆகியோரை தேடி வருகின்றனர். வாலிபரை பழிவாங்க அவரது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.