தொடர் மழையால் மூணாறு நிலச்சரிவு: 142 தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் மீட்பு- சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின.

இதனால் கடந்த 2018-ல் ஏற்பட்ட மழைபாதிப்பை போல பேரழிவை நினைவுக் கூறும் வகையில் மழை அதிகமாக இருந்து வருகிறது.

இடுக்கியில் கடந்த 2 நாள்களுக்கு முன் மழை குறைந்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் மழை அதிகமாக பெய்யத் தொடங்கியது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 140 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இந்நிலையில் நேற்று 24 மணி நேரத்தில் சராசரியாக 98.64 மில்லி மீட்டர் மழை பெய்தது. இடுக்கியில் மட்டும் 157.2 மில்லி மீட்டர் மழையும், தேவிகுளத்தில் 146.4 மில்லி மீட்டர் மழையும், பீர்மேடு பகுதியில் 113.4 மில்ல மீட்டர் மழையும் பதிவானது.

நேற்று நள்ளிரவு மூணாறு டவுனில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாப் ஸ்டேஷன் வட்டவடை குண்டலை எஸ்டேட் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு விநாயகர் கோயில், 3 டீக்கடைகள், 2 ஆட்டோக்கள் மண்ணில் புதைந்தன. அங்கிருந்த 142 தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 15 குடும்பங்கள் குண்டளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செண்டுவாரா முகாமுக்கு பேரிடர் மீட்பு குழுவால் அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள 127 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள அவர்களது உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மூணாறு பகுதியைச் சேர்ந்த பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர் செந்தில் குமாரிடம் பேசினோம். “தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்டுள்ள மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல போலீஸார், தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தில் பாதிக்கப்படுவோரை மீட்டு தங்க வைப்பதற்காக மூணாறில் மட்டும் 4 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஊராட்சி வாரியாகவும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு நீர்நிலைகள், நீர்வரத்து பாதைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டிருந்ததால் நீர்வரத்து பாதையில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை.

ஆனால் அதிமாக மரங்கள் வெட்டப்பட்டு எஸ்டேட்களும், கட்டடங்களும் உருவானது தான் நிலச்சரிவு காரணாக உள்ளது. மரங்கள் அடர்த்தியாக இருந்தால் அதன் வேர்கள் மண்ணை இறுகப்பிடித்து கொள்வதால் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்கும். தனியார் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் ஒரு சிறு அருவியில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். டாப் ஸ்டேஷனில் இருந்து மழைநீர் அதிகமாக வந்ததால், மலையின் கீழ்பகுதியில் பிடிமானம் இல்லாததால் மலையின் மேலிருக்கும் மரங்கள் மண்ணுடன் சேர்ந்து சரிந்துள்ளது. எனவே யூகலிப்டஸ் மரங்களை தவிர பிறமரங்கள் வெட்டப்படுவதை தவிர்ப்பது இதுபோன்ற நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கும்” என்றார்.

மூணாறு வட்டவடை சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் சாய்ந்துள்ளதாலும் அப்பகுதிகளில் போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், இடுக்கி அணை செல்லும் நீர்வழிபாதையான வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரா, ஐயப்பன் கோயில் ஆகிய கரையோரப்பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.