சென்னை: செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் விசிட் அடித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தலைநகர் சென்னையில் முதல்முறையாக நடைபெறுகிறது. ஜூலை 28இல் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள நிலையில், இதுவரை இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுமே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும் பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் கலந்து கொண்டு உள்ளனர். சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த பல வீரர்- வீராங்கனை கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நேற்று வரை 7 சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற முடிந்து உள்ளன. இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சொகுசு விடுதி, போட்டி நடைபெறும் இடங்கள் முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குத் தமிழ்நாடு அரசு மிக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் போட்டியின் ஏற்பாடுகளையும் வரவேற்பு உள்ளிட்ட உபசரிப்புகளையும் பாராட்டி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாங்கள் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்று பாராட்டி வருகின்றனர். விடுதிகளில் வழங்கப்படும் தென்னிந்திய உணவுகளையும் செஸ் வீரர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் நேற்று மாமல்லபுரத்தில் 7ஆம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது முதல்வர் ஸ்டாலின் போட்டி நடைபெறும் இடத்திற்கு குடும்பத்தினருடன் திடீர் விசிட் அடித்தார் முதலில் வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதியைப் பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அடுத்து போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு அமைந்து இருந்த சுற்றுலாத்துறை அரங்கைப் பார்வையிட்டார். அங்கு வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார். இரவு நேரத்தில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடை பிடித்தபடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தார்.