ஆடத் தெரியாதவர் மேடையை பார்த்து கோணல் என்று சொன்னது போல ஜி.எஸ்.டி அமைப்பு குறித்து குறை சொல்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை முற்றிலுமாக தரப்பட்டு விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “பிராண்ட் உணவுப் பொருள் மீதான வரி குறித்து திமுகவினர் பல பொய்களை கட்டவிழ்த்து வருகின்றனர். ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகள் ஏகமனதாக ஏற்ற பிறகு வரி அமலுக்கு வந்தது. மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆட தெரியாதவர் மேடையை பார்த்து கோணல் என்று சொல்வது போல ஜிஎஸ்டி அமைப்பு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறைக்கூறி வருகிறார். கேள்வி கேட்டு தமிழில் பேச சொல்லிவிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழில் பதில் சொன்னபோது, எழுந்து போன திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மத்திய அரசை எப்படி குறை கூற முடியும் என்றார்.
முன்னதாக நவம்பர் 2021-ல் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பதற்கு முன்பாகவே, தமிழ்நாடு அரசு வரிகளைக் குறைத்திருக்கிறது. ஆகஸ்ட் 2021-ல் பெட்ரோல் மீதான மாநில வரி ரூ3 குறைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் வரிக் குறைப்பால் மாநில வரியிலும் ரூ1.95 குறைந்திருக்கிறது. அதாவது பெட்ரோல் வரி ரூ4.95 குறைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் டீசல் மீதான வரி ரூ1.76 குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வரிகளைக் குறைத்திருந்தாலும், 2014 முன்பிருந்த அளவுகளை விட அதிகமாகவே உள்ளது. பெட்ரோல் வரி ரூ10.42, டீஸல் வரி ரூ12.23 வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.