பிரேசிலியா: ஆபத்தான ஊசிகளை போட்டு மாஸ் போஸ் கொடுத்த பிரபல பாடிபில்டர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவர் செய்த காரியம் விபரீதத்தில் முடிந்தது. பிரேசில் நாட்டின் பிரபல பாடிபில்டர் மற்றும் டிக்டாக் நட்சத்திரமான வால்டிர் செகாடோ (55) என்பவர், தனது உடலின் பாகங்களை புஷ்டியாக காட்டிட உயிருக்கு ஆபத்தான எண்ணெய் ஊசிகளை (எண்ணெய், ஆல்கஹால், வலி நிவாரணிகளின் கலவை) போட்டு ‘மாஸ் போஸ்’ கொடுத்து வந்தார். இதனால் அவருக்கு கடுமையான நரம்பு பாதிப்பு மற்றும் உறுப்பு துண்டிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர்.
ஆனால், தனது ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக ஆபத்தான எண்ணெய் ஊசிகளை போட்டுக் கொண்டு உடலின் பாகங்களை புஷ்டியாக காட்டி போஸ் கொடுத்து வந்தார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்திற்கும் மேல் உள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி ‘ஹல்க்’ போன்ற தசைகளை உருவாக்க பயன்படுத்தி வந்த ஆபத்தான ஊசிகளால் பாதிக்கப்பட்ட வால்டிர் செகாடோ, தனது பிறந்த நாளில் திடீரென இறந்தார். பல ஆண்டுகளாக ‘சின்தோல்’ ஊசிகளைப் பயன்படுத்தியதால், அவர் மரணம் அடைந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘தென்கிழக்கு பிரேசிலில் உள்ள ரிபேராவ் பிரிட்டோவில் உள்ள அவரது வீட்டில் வால்டிர் செகாடோ வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பல ஆண்டுகளாக சில நண்பர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்த அவர், சின்தோல் ஊசி மருந்துகளுக்கு அடிமையாகி இருந்ததால், பலரது எச்சரிக்கையும் புறக்கணித்ததால் இறந்தார்’ என்று அவர்கள் கூறினர்.