தேசியக் கொடியை DP ஆக வைத்துள்ள பிரதமர் மோடி..!

தனது சமூக ஊடக பக்கத்தில் தேசியக் கொடியை DP ஆக வைத்துள்ள பிரதமர் மோடி, மக்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை DP ஆக வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், அதனை சுதந்திர அம்ருத மகோத்சவமாக சிறப்புடன் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வானொலி உரையில், நமது தேசியக் கொடியை உருவாக்கிய பிங்லி வெங்கைய்யாவின் பிறந்த தினம் ஆகஸ்ட் 2ம் தேதி என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அன்றைய தினத்தில் இருந்து சுதந்திர தினம் கொண்டாட உள்ள ஆகஸ்ட் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்களின் சமூக பக்கங்களில் display picture(DP) ஆக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக பக்கத்தில் DP ஆக இருந்த தனது படத்திற்குப் பதிலாக தேசியக் கொடியை வைத்துள்ளார்.

மூர்வண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாம் பெருமிதம் கொள்ளும் மூவர்ணக்கொடியை நமக்கு வழங்குவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நாடு என்றென்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மூவர்ணக் கொடியின் வலிமையையும் உத்வேகத்தையும் எடுத்துக் கொண்டு, தேச முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டை கொண்டாட உள்ள இந்த சிறப்பு தருணத்தில், நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கூட்டு இயக்கத்திற்கு தேசம் தயாராக உள்ளதாகவும், தான் தனது சமூக ஊடகப் பக்கங்களில் DPயை மாற்றியுள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.