வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை இன்று தொடங்குகிறது.
இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கான வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவு, இறந்தவா்களின் பெயா்கள் இடம்பெற்றிருப்பது, இடம் மாறியவா்களின் விவரங்கள் இருப்பது போன்றவை தோதல் ஆணையத்துக்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன இதனால் ஏற்படும் பிரச்னைகளைக் தீர்க்க, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நாடு தழுவிய நடவடிக்கையை தோதல் ஆணையம் இன்று தொடங்குகிறது. . இதற்கென வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று படிவம் 6பி-ஐ வழங்க உள்ளனா். இதில், ஆதாா் எண், வாக்காளா் பட்டியல் வரிசை எண், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே கோரப்படும். நிறைவு செய்யப்பட்ட படிவங்களை வாக்குச் சாவடி அலுவலரிடமே கொடுத்தால், அவா் அதனை சம்பந்தப்பட்ட தோதல் துறை அதிகாரியிடம் வழங்குவாா். இதற்கென பிரத்யேகமாக உள்ள மென்பொருளைக் கொண்டு வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும்.
தமிழகத்திலும் இந்தப் பணி தொடங்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதாா் எண் இணைப்பு உள்பட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெரியசாமி, எழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுக நாயனார், ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி சார்பாக தாமோதரன், நவாஸ், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக R.S பாரதி, பரந்தாமன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமனும், ஓபிஎஸ் அணி சார்பாக கோவை செல்வராஜூம் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுகவினருக்கு 3 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்க்கு முன்னதாக ஓபிஎஸ் அணி சார்பில் கோவை செல்வராஜ் வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரே அதிமுக என்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்ற பெயர் பலகையை நைசாக நகர்த்தி தன் பக்கம் வைத்துக்கொண்டார். அதாவது அதிமுக தங்களுக்கு தான் சொந்தும் என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க ஜெயக்குமார் செய்த செயலை பார்த்த அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.