சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் மோடி இன்று நேரம் ஒதுக்கினார்.
இவர்கள் இடையில் 5-10 நிமிடம் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் அஹமதாபாத் செல்கிறார்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கினார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவரை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் முயற்சி எடுப்பார் என்று முன்பே கூறப்பட்டது. நேற்றே இதற்காக அவர் நேரம் கேட்டதாக செய்திகள் வந்தன. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பில் இருந்தும் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இரண்டு பேருக்குமே இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி நேற்று மாலை ஆளுநரையும், சில பாஜக தலைவர்களையும் மட்டுமே சந்தித்தார். அதிமுக தலைகளை தனியாக சந்திக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்றும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் முயன்று இருக்கிறார். தனக்கு இருக்கும் டெல்லி சோர்ஸ்கள் மூலமும், ஓபி ரவீந்திரநாத் எம்பி மூலமும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
இந்த விழா முடிந்த பின் 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மோடி அஹமதாபாத் செல்கிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து மோடியை சந்திக்க 10 நிமிடம் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தரப்பும் இதற்கான நேரத்தை ஓ பன்னீர்செல்வத்திற்கு வழங்கி உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிமுக அரசியல் விவகாரங்கள், எடப்பாடி உடனான மோதல் குறித்து ஓ பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது,
நேற்று எடப்பாடியை மோடி தனியாக சந்திக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மோடி தன்னை சந்தித்தால், அது தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக இன்று ஓபிஎஸ் மோடியை ஒருவழியாக சந்தித்தார். எடப்பாடியை சந்திக்காத மோடி.. என்னை சந்தித்துவிட்டார் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக ஓ பன்னீர்செல்வம் இவ்வளவு பிரயத்தனங்களை செய்ததாக கூறப்படுகிறது.
வெளியே நின்ற செய்தியாளர்களை சந்திக்காமல்.. கையை கூப்பியபடி காரில் ஓ பன்னீர்செல்வம் விமான நிலையம் உள்ளே சென்றார். உள்ளே அவர் பிரதமர் மோடியுடன் 5-10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி உடனான மோதல் குறித்து ஓ பன்னீர்செல்வம் பேசியதாக கூறப்படுகிறத. ஓ பன்னீர்செல்வம் உடல்நிலை பற்றி மோடி விசாரித்து உள்ளார்.