விபரீதத்தில் முடிந்த பள்ளி காதல் : 11-ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி பதிவு செய்த சிறுவன்..!!

கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார். அதன்பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார். போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசி காதலை வளர்த்தனர். வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார். ஒருகட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான். இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகினார். அதன்பிறகு மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார். சிறுவன் பொய் சொல்வதாக நினைத்த சிறுமி, என்னிடம் இதுபோல் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேசினார். அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் போலீஸ்நிலையத்திலும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி உள்ளார். அதனால் அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகளை கூறி வருகின்றனர். பள்ளி-கல்லூரி மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை தர கூடாது. மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் தயக்கம் இன்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் குழப்பத்தில் இருந்தால் விசாரித்து அவர்களை தைரியப்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு தருபவர்களை காப்பாற்ற முயற்சி செய்ய கூடாது. போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என கூறி வருகிறார்கள். போலீசாரின் எச்சரிக்கையை மீறி கோவை மாணவியை போல் ஏமாற்றும் நபர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே இனிமேலாவது மற்ற மாணவிகள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.