சர்வதேச அளவில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை உயர்த்தி வருவது போன்ற காணங்களால், ஆசியாவில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குள் சிக்கும் என்று ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஏற்கெனவே மோசமான பொருளாதாரச் சூழலில் சிக்கியிருக்கும் இலங்கை அடுத்த நிதியாண்டில், இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும். 2023ம் ஆண்டில் ஏறக்குறைய 85 சதவீதம் பொருளாதார மந்தநிலைக்குள் இலங்கை சிக்கும் என ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொருளாதார மந்தநிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆசியாவில் பல நாடுகள் நிலை மாற்றமில்லாமல் தொடர்கிறது. சீனா பொருளாதார மந்தநிலைக்குள் சிக்க 20 சதவீதம் வாய்ப்புள்ளது, தென் கொரியா அல்லது ஜப்பான் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் சிக்க 25 சதவீதம் வாய்ப்புள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை பொருளாதார மந்தநிலைக்குள் சிக்க 85 சதவீதம் வாய்ப்புள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில 33 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆசியாவிலே பொருளாதார மந்தநிலையில் சிக்க அதிகமான வாய்ப்புள்ள நாடாக இலங்கை இருக்கிறது.
இது தவிர நியூஸிலாந்து 33 சதவீதம், தைவான் 20 சதவீதம், ஆஸ்திரேலியா 20 சதவீதம், பிலிப்பைன்ஸ் 8 சதவீதம் பொருளாதார மந்தநிலையில் சிக்க வாய்ப்புள்ளது. இந்த நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அங்குள்ள மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்தி வருகின்றன.
ஆனால், ஆசியாவில் பிற நாடுகள், பொருளாதார மந்தநிலைக்குள் சிக்குவற்கான வாய்ப்பு சதவீதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஆசியப் பொருளாதாரங்கள் பெரும்பாலும் மீள்தன்மையுடன் உள்ளன.
மூடிஸ் ஆய்வு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியதத்தின் பொருளாதார வல்லுநர், ஸ்டீபன் கோக்ரேன் கூறுகையில் ” ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு அந்நாடுகளை பாதிக்கும். ஆசியாவைப் பொறுத்தவரை பொருளாதார மந்தநிலையில் சிக்குவதற்கான வாய்ப்பு 20 முதல் 25 சதவீதம் வாய்ப்புள்ளது.
ஆனால், அமெரிக்கா 40 சதவீதமும்,ஐரோப்பிய நாடுகள் 50 முதல் 55 சதவீதம் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்
அடுத்த 12 மாதங்களில் அமெரிக்கா பொருளாதார மந்தநிலையில் சிக்குவதற்கான வாய்ப்பு 38சதவீதமாகஅதிகரிக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன் இது 10 சதவீதாகத்தான் இருந்தது. டாலர் மதிப்பு அதிகரித்தல், வட்டிவீதம் உயர்வு, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை பொருளாதார மந்தநிலைக்கு காரணங்களாகும்.
ஆசிய மேம்பாட்டு வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் ” ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சியை 4.6 சதவீதமாகக் குறைத்தது. வளர்ந்த நாடுகள் வட்டி வீதத்தை உயர்த்துவதால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் கணிக்கும்போது 5.2 சதவீதமாக இருந்தது” எனத் தெரிவித்தது.
பொருளாதார மந்தநிலையில் சிக்குவதற்கு வாய்ப்புள்ள நாடுகள் சதவீதம்
பொருளாதார மந்தநிலை |
சதவீதம் |
இலங்கை |
83% |
நியூஸிலாந்து |
33% |
தென் கொரியா |
25% |
ஜப்பான் |
25% |
சீனா |
20% |
ஹாங்காங் |
20% |
ஆஸ்திரேலியா |
20% |
தைவான் |
20% |
பாகிஸ்தான் |
20% |
மலேசியா |
13% |
வியட்நாம் |
10% |
தாய்லாந்து |
10% |
பிலிப்பைன்ஸ் |
8% |
இந்தோனேசியா |
3% |
இந்தியா |
0 |
ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று முழுமையாக முடிந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ள நேரத்தில் ரஷ்யா உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவது போன்றவை பொருளாதார வளர்ச்சி வேகத்தை குறைத்துள்ளன.
இதில் பொருளாதார மந்தநிலையில் சிக்குவதற்கு இந்தியாவுக்கு மட்டும் வாய்ப்பில்லை என்று ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையான பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி கையிருப்பு, பொருளதார நிலைத்தன்மை, ஜிடிபி வளர்ச்சி போன்றவைதான் பொருளாதார மந்தநிலையில் சிக்காமல் இருக்க காரணமாகும்