நலிவடைந்து வந்த நிலையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தால்
புத்துணர்ச்சி பெற்ற விசைத்தறி தொழில்..
கருமத்தம்பட்டி: தமிழக அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் விதமாக `மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளார். மஞ்சப்பையை கிராமத்தினர் அடையாளமாகவும், நாகரிமற்றதாகவும் மாற்றி வைத்திருக்கும் சூழலில் அதன் முக்கியத்துவத்தை உணர வைத்துள்ளார். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை கொண்டு வந்ததால் சுற்றுச்சூழல் மட்டுமல்ல விசைத்தறி தொழிலும் வளர்ச்சி அடையும்.
சுத்தமான காட்டன் துணியால் தயாரிக்கக்கூடிய மஞ்சப்பையினால் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களுக்கு துணி விற்பனையும், குடிசைத் தொழிலாக செயல்பட்டு மஞ்சப்பை தயாரிப்பில் பெண்களும் அதிக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.
இந்த பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாகக் குவிந்து நிலம், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல் வாழ் உயிர்கள் அனைத்துக்கும் பாதிப்பு உண்டாக்கி மனிதர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் சுற்றுச்சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மட்டுமல்ல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். சமீப காலமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் மஞ்சப்பை உற்பத்தியினால் மீண்டும் புத்துணர்ச்சி பெற அதிக வாய்ப்பு உள்ளது. விசைத்தறியில் நெசவு செய்ய கூடிய காட்டன் துணி தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் முதல் தரம் துணிகள் மட்டும் வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டாம் தர துணிகள் வழக்கமாக விற்பனையாவதில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் பெருத்த நஷ்டத்தை அடைந்து வந்தனர். தற்போது தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினால் இந்த துணிகள் விற்பனையாவதால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூர் பகுதி விசைத்தறியாளர்களிடம் இருந்து பெறக்கூடிய தரமான காட்டன் துணியை கொண்டு மஞ்சப்பை உற்பத்தி செய்யப்படுகிறது. தூய காட்டன் துணியை கொண்டு தயாரிக்கக்கூடிய காட்டன் துணிப்பை ஈரோடு பகுதிகளில் மஞ்சள் சாயம் ஏற்றப்பட்டு ஆர்டருக்கு ஏற்ற பெயர் அச்சடிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதால் மஞ்சப்பை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய இந்த துணிப்பையை அதிக அளவில் ஜவுளி கடைகளுக்கும், நகைக் கடைகள், கோவில்களில் பிரசாதம் வழங்குவதற்காகவும், இருமுடிப் பையாகவும், திருமண சுப நிகழ்ச்சிகளில் அன்பளிப்பாகவும் வழங்கவும், வணிக நிறுவனங்களில் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி, புத்தகக் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் அரிசி கடைகளிலும் அதிக அளவில் இந்த துணிப்பை பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சோமனூரில் மஞ்சள் பை தயாரிக்க கூடி சந்திரசேகரன் என்பவர் கூறியதாவது:-
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினால் சுற்றுச்சூழலை காப்பது மட்டுமல்லாமல் விசைத்தறி தொழிலாளர்களும், இதை சார்ந்து மஞ்சப்பை தயாரிக்கும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தரமான முறையில் உற்பத்தி செய்யக்கூடிய மஞ்சள் பை அதிக அளவில் நீலகிரி, கொடைக்கானல், மூணாறு, ஏற்காடு போன்ற மலைவாழ் இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏனெனில் அந்த பகுதிகளில் 100சதவீதம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள வணிக நிறுவனங்களிலும், பொதுமக்களும் அதிக அளவில் துணி பையை பயன்படுத்துகின்றனர். அதேபோன்று தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளதால் அங்கும் அதிக அளவில் துணிப்பை பயன்படுத்தப்படுகிறது. அரை அடி முதல் இரண்டு அடி வரையில் தயாரிக்க கூடிய துணிப்பைகள் ரூ.5 முதல் ரூ.120 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தது இந்த பைகள் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரையில் நீடித்து உழைக்கக் கூடியது. உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் மஞ்சள் பை விற்பனையை அதிகரித்துள்ளது. ஆடர்கள் தொடர்ந்து வருகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றுத்துறை, சுகாதார ஆய்வாளர்கள், வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக அந்தந்த பகுதிகளில் சுற்றுப்புறத்தை காக்கும் வகையில் செயல்பட்டால் சுகாதாரத்தை காப்பதோடு இந்த தொழிலை நம்பி வாழக்கூடிய லட்சகணக்கானோர் வேலைவாய்ப்பை பெற முடியும். விசைத்தறி சார்ந்த தொழிலும் வளர்ச்சி அடையும். தமிழக முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு 100சதவீதம் தடை விதிக்கும் பட்சத்தில் துணிப்பை உற்பத்தி தயாரிப்பாளர்கள் அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.