கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு பின்புறம் குரும்ப பாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சம்மாள் நகர் உள்ளது.
அதன் சுற்றுப்பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர், நேற்று நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது அங்கு அவர் கரடி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தார். ஓடுவதை கண்டதும் கரடி விவேகானந்தனை துரத்தியது. ஆனால் அவர் உடனே வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தப்பிதார். கரடி அந்த பகுதியில் சிறிது நேரம் உலாவி கொண்டு, வன பகுதியை நோக்கி திரும்பி சென்றது. ஒரு ஆள் உயரத்திற்கு கரடி நிற்பதை கண்டு பயந்துபோனதாகவும், அதனால் காய்ச்சல் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
இந்த பகுதியை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் எங்களுக்கு மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எந்த நேரத்திலும் கரடி வீட்டுக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறோம். இரவு மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளோம்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் வேலைக்கு செல்பவர்கள், வீடு திரும்பும்போதும், கரடி எதிரே வந்துவிடுமோ என்ற பயத்திலேயே வருகிறோம்.எனவே வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரடியை பிடிக்க வேண்டும் என்றனர்.