சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா : பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் – டி.ஆர்.பாலு, கனிமொழி வழங்கினர்..!

சென்னை: சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்பிக்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர்.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம்தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ம்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையே, கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, ‘சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததாகவும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், தொடக்க விழாவில் பிரதமர் அவசியம் பங்கேற்க வேண்டும்’ என்றும் பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஸ்டாலின் சார்பில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் நேற்று சந்தித்து, 28-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ‘தம்பி’ சின்னத்தையும் வழங்கி விழாவுக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்கூர் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, தம்பி சின்னத்தையும் வழங்கினர்.