அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கிய இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவரது மகன்கள், அவரது ஆதரவாளர்கள் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஈபிஎஸ்ஸின் இந்த அறிவிப்புக்கு, ஓபிஎஸ்ஸின் இரு மகன்களும் அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றனர். முதலாவதாக அதிமுகவின் ஒரே மாநிலங்களவை எம்பியும், ஓபிஎஸ்ஸின் மூத்த மகனுமான ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா எனக்கு கொடுத்த வரம் அதை நீக்கவும், ஒதுக்கவும் எடுக்கவும் கோமாளி கூட்டத்திற்கு அதிகாரம் இல்லை.. கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த இடையில் வந்த எடையில்லா பாடிக்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்.. ஒன்றரை கோடி உண்மைத் தொண்டர்களே ஒன்றிணைவோம். ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்.. என எதுகை மோனையோடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, அவரது இளைய மகனான ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாருடைய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும், விமர்சனங்களும் சூழ்ச்சிகளும், துரோகங்களும் எதிர்கொள்ளும் போது, என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது. காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம் என கூறியுள்ளார்.
இவர்கள் இருவரோடு சேர்த்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட்ட துணை செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்ட 18 பேரை ஈபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிராக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்போது யார் கையில் கட்சி உள்ளது? யார் யாரை நீக்கியது செல்லும்? என பலகட்ட குழப்பத்தில் இருப்பது தொண்டர்கள் தான்.