திருவனந்தபுரம்: ராஜநாகம் கடித்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
தான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காடுகளில் விடும் பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
பல்லுயிர் சமன்பாட்டுக்கு பாம்புகள் மிகவும் அவசியம் என்பதை அறிந்த மக்கள் தற்போது பாம்புகளை கண்டவுடன் அடித்துக் கொல்லாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். இல்லாவிட்டால் பாம்புகளை பிடிக்கும் தன்னார்வலர்களை அழைக்கிறார்கள்.
இவ்வாறு பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் தன்னார்வலர்களில் வாவா சுரேஷ் பிரபலமானவர். ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து அவற்றை பாதுகாப்பாக காடுகளில் கொண்டு போய் விட்டவர்.
இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் இடத்தில் ஒரு வீட்டில் ராஜநாகம் புகுந்துவிட்டதாக வாவா சுரேஷுக்கு போன் வந்தது. இதையடுத்து அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு வாவா சுரேஷ் அந்த பகுதிக்குச் சென்றார். அப்போது பாம்பை லாவகமாக பிடித்த அவர் சாக்குப்பைக்குள் போட முயற்சித்தார்.
அப்போது அவரது கைப்பிடியிலிருந்து நழுவிய பாம்பு, அவர் சுதாரிப்பதற்குள் வலது தொடை பகுதியில் கடித்தது. இதையடுத்து அங்கேயே மயங்கிய அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கோட்டயம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.
கோமாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு மீண்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி நீக்கப்பட்டு தானாகவே சுவாசிக்கத் தொடங்கினார். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு கேரள அரசே சிகிச்சைக்கான செலவை ஏற்றது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வாவா சுரேஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
அவரை அப்பகுதி மக்கள் திரண்டு வரவேற்று நலம் விசாரித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இது எனக்கு மறுபிறவி. இனி பாம்புகளை பிடிக்கும் போது கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் நான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.
ராஜநாகத்தை பிடிக்கும் போது வாவா சுரேஷ் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் அறிவியல் பூர்வமான நுட்பங்களை பயன்படுத்த தவறியதாகவும் எழுந்த புகார்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் பயிற்சியை முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளுக்கு நான்தான் கொடுத்தேன். அப்போது நிறைய பாம்பு பிடிப்பவர்கள் இருந்ததாக நான் கேள்விபட்டதில்லை. ஆனால் இப்போது எனக்கு எதிராகவே பிரச்சாரம் நடக்கிறது. வனத்துறை அதிகாரி ஒருவர், அவரது பெயரை சொல்ல நான் விரும்பவில்லை, பாம்பை பிடிக்க என்னை (வாவா சுரேஷை) அழைக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது என்றார்.
வாவா சுரேஷுக்கு 65 பாட்டில்கள் விஷமுறிவு மருந்துகள் கொடுக்கப்பட்டது. அவரது உடலில் பாம்பின் விஷம் நிறைய பரவி இருந்ததால் நிறைய விஷ முறிவு மருந்துகள் கொடுக்கப்பட்டன. பொதுவாக பாம்பு கடிக்கு அதிகபட்சம் 25 பாட்டில்கள்தான் கொடுக்கப்படும். ஆனால் பாம்பு கடியால் பாதித்தவருக்கு 65 பாட்டில்களை முதல்முறையாக இந்த மருத்துவமனை கொடுத்துள்ளது.