விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெளர்ணமியையொட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி அகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அன்றைய நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து, வழிபாடு செய்வர். எனவே அந்த நாட்களில் மட்டுமே மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினரால் அனுமதி வழங்கப்படும்.
தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சமயங்களில் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி வழங்கப்படுவதில்லை. மேலும் கொரோனா தொற்று காரணமாக சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிப்பாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெளணர்மியையொட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவிலில் இன்று பிரதோஷ வழிப்பாடும், நாளை மறுநாள் பெளணர்மி வழிப்பாடு நடைபெற உள்ளது. மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னர் தான் பக்தர் மலையேற அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது