இந்தியாவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதச் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல், பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அந்த உத்தரவை மீறி, 40 மில்லியன் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக, விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த 2014 ஆம் ஆண்டில், விஜய் மல்லையாவை குற்றவாளி என உறுதி செய்த நிலையில், இன்று (ஜூலை 11) தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, விஜய் மல்லையாவுக்கு 4 மாதச் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஏப்ரல் 18, 2017 அன்று ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையினர் நாடு கடத்தல் வாரண்டை செயல்படுத்தும் நோக்கில் அவரை கைது செய்தனர். அந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.
முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி விஜய் மல்லையா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.