கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் தடாகம் ரோடு எரிமேடு முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த திருஞானம் (வயது 25), சாய்பாபா காலனியை சேர்ந்த அபாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.