இந்தியாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி 2014 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியில் இருந்து இன்னும் காங்கிரஸ் கட்சியால் எழுந்திருக்க முடியாமல் உள்ளது. தங்கள் கைவசம் இருந்த 20க்கும் மேற்பட்ட மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தநிலையில் 113 ஆண்டுகளில் உ.பியில் காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத சட்ட மேல்சபை உருவாகியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேச சட்ட மேல்-சபை 1887-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. 1909-ம் ஆண்டு, 46 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது, ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசின் முதலாவது எம்.எல்.சியாக பதவி ஏற்றார்.
1909 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேல் சபையில் உறுப்பினர்கள் இடம்பெற்று வந்தனர். இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புதிதாக யாரையும் மேல்-சபைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. மேல் சபையில் காங்கிரஸ் சார்பில் இருந்த ஒரே எம்.எல்.சி தீபக்சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரேதச மேல்சபையில் 72 உறுப்பினர்களுடன் ஆளும் பா.ஜனதா வலிமையாக உள்ளது.