கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராகவும் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில் வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரசேகர் வீட்டில் காலை 11 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் மற்றும் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய போது, சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் முறைகேடுகள் தொடர்பாக சந்திரசேகர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0