மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால், கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகளை வடிவமைத்து புழக்கத்தில் விடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது, சேலத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. குறிப்பாக, வார்ச்சந்தைகள், உழவர் சந்தைகள், காய்கறி, கறி, மீன் மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது.
கள்ள நோட்டுகளை பெறும் வியாபாரிகள் அதை வங்கியில் செலுத்தும் போது அவை கள்ள நோட்டு என்பது தெரிய வருகிறது. இதனால் அவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால், சிறிய, நடுத்தர வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் 200 ரூபாய் நோட்டுகளை வாங்கவே அஞ்சுகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கும்பல் தற்போது 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகிறது. இந்த கும்பல் சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது.
இதனால், வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்’ என்றனர்.